வெள்ளி, 8 டிசம்பர், 2017

அய்யா வழி வேறு, இந்து மதம் வேறு

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வருணாசிரமம் படி மனிதரை நால்வகையாய் கூறுபோட்டது இந்து மதம்.
"அய்யா வழி மக்கள்" என்று ஒருமைப்படுத்தி அன்பை மட்டுமே போதித்தது அய்யா வழி.

சாணார்(நாடார்) உள்ளிட்ட பதினெட்டு சாதியினர் இடுப்பில்தான் துண்டைக் கட்ட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது பிராமண இந்து மதம்.
துண்டை எடுத்து சுயமரியாதையுடன் தலையில் கட்டி விட்டது அய்யா வழி.

மேல்சாதி, கீழ்சாதி என பிரித்து வைத்து மனுதர்மம் காத்தது இந்து மதம்.
“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்கிறது அய்யா வழி.
அனைவரும் சமபந்தியில் அமரவைத்து, உணவளித்து உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டியது அய்யா வழி.

குறிப்பிட்ட சில சாதிகள் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிப்பது இந்து மதம்.
அனைத்து சாதியினரும் நிழல்தாங்களுக்குள் செல்ல அனுமதிப்பது அய்யா வழி.

இதிகாச கற்பனைத் தெய்வங்களை வணங்க சொன்னது இந்துமதம்.
"உனக்குள் இருக்கும் உன்னை உணர்" என்று வலியுறுத்தும் விதமாக கண்ணாடியை நிழல்தாங்களுக்குள் வைத்து வணங்க சொன்னது அய்யா வழி.

பில்லி, சூனியம், மந்திரம், யாகம்,  உள்ளிட்ட  மூடநம்பிக்கைகளை  ஊக்குவிப்பது  இந்துமதம்.
அனைத்து மூடநம்பிக்கைகளையும் கடலில் தூக்கி வீசுங்கள் என கூறியவர் ஐயா வைகுண்டர்.

பெண்களைத் தீட்டு என்று கூறி கோவிலுக்குள் விட மறுத்தது இந்து மதம்.
பெண்களையும் அய்யா வழிப் பதிகளில் அனுமதித்து பாலின சமத்துவம் அளித்தது அய்யா வழி.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய  இந்துமத, பிராமண, உயர்சாதிக் கொடுமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற புரட்சி செய்தவர் ஐயா வைகுண்டர்.
அவர் போதித்த அகிலத்திரட்டும், இந்துமத பகவத் கீதையும் ஒன்றல்ல.
வைகுண்டர் வழிவந்தவர்கள் இன்று இந்து மதத்தின் பிடியில் சிக்கித் தவிப்பது காலத்தின் கொடுமை.

புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறி விழுங்கிய இந்துமதம் வைகுண்டரையும் அவ்வாறே விழுங்கியது.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

திராவிடத்தின் விளம்பர அரசியலும், தலித் கேடய அரசியலும்

சமீப காலமாக பட்டியல் வகுப்பு மக்களைக் கேடயமாக்கி நடத்தப்படும் தமிழர் விரோத அரசியல் நடத்தப்படுவது தெரிகிறது.
அதாவது தமிழ்நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதனை சாதியப் பிரச்சினையோடு ஒப்பீடு செய்து போராட்டத்தினை மழுங்கடிக்கும் வேலையை சில திராவிட அறிவாளிகள் செய்கிறார்கள். அது புரியாமல் பட்டியல் வகுப்பு மக்கள் சிலரும் இந்த வலைப்பின்னலில் வீழ்கிறார்கள்.

"காவிரிக்குப் போராடுறீங்களே, சாதியத்திற்கு எதிராகப் போராடுனீங்களா?

ஜல்லிக்கட்டுக்குப் போராடுறீங்களே, சாதியத்திற்கு எதிராகப் போராடுனீங்களா?"
என குதர்க்கமானக் கேள்விகளைக் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவார்கள் திராவிட அறிவாளிகள். மற்றதை பட்டியல் வகுப்பு தோழர்கள் தொடர்வார்கள்.

தமிழ்நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இது போன்ற ஒப்பீடுகளால் சாதி ஒழிந்து விடுமா?
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட திராவிடக் கட்சிகள் ஒருநாளும் சாதி  ஒழிப்பை பேசியதில்லையே? ஏன்? இதுகுறித்து பட்டியல் வகுப்பு தோழர்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

தருமபுரி நாயக்கன்கோட்டை  சேரி எரிப்பில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளை சார்ந்த அனைவரும் ஈடுபட்டார்கள். திமுக உறுப்பினர்கள் பதினாறு பேர் ஈடுபட்டார்கள். அவர்கள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திமுகவை நோக்கி ஏன் கேள்வி கேட்பதில்லை?
அப்புறம் எப்படி சாதிய ஒடுக்குமுறைகள் குறையும்??

ஆட்சியில் எந்த திராவிடக் கட்சி அமர்ந்தாலும் "திராவிட ஆட்சி" என புகழும் சுபவீ, வீரமணி வகையறாக்களை கேள்வி கேட்காமல் காவிரிக்கும், ஜல்லிகட்டுக்கும் வந்து போராடுபவர்களை மட்டுமே கேள்வி கேட்பது ஏன்? அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களை கேள்வி கேட்காமல் போராட்ட சக்திகளை கேள்வி எழுப்பி என்ன சாதிக்கப் போகிறோம்?

உண்மையில்   "பட்டியல் வகுப்பு மக்களுக்கு நாங்கள் போராடுவோம். அவர்கள் எங்களுக்கு கீழே இருக்க வேண்டும்" என்கிற ஆதிக்க மனப்பான்மைதான்   திராவிட அரசியலில் இருக்கிறது.

சமீபத்திய இரு உதாரணங்களை சொல்கிறேன்.

1. கலைஞரை சந்திக்க திருமா சென்றபோது அரசியல் நாகரீகம் என்றார்கள் திமுகவினர்.
அதுவே சசிகலாவை சந்திக்க திருமா சென்றபோது "சசியை சந்தித்த முதல் அடிமை" என்றார்கள். திருமா அடிமை மனப்பான்மையோடு இருக்கிறார் என சாடினர்.
தேவந்திரர்களை போல சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என பாடம் எடுத்தார்கள். அதாவது இரு கட்சிகளுக்கும் நடுவே சண்டை மூட்டுகிறார்களாம்.

2. தனது புத்தாண்டு வாழ்த்தின்போது "திராவிட மாயையை அகற்றுவோம். சாதிய வேறுபாடுகளை களைந்து தமிழராய் ஒன்றுபடுவோம்" என்று சொல்லியிருந்தார் மருத்துவர் கிருஷ்ணசாமி.
"நீ படிக்கவே திராவிடம் தான் காரணம், பெரியார்தான் காரணம்" என்று அவரது பக்கத்தில் சென்று சண்டை போட்டார்கள் பெரியார் பக்தர்கள்.
அதாவது கிருஷ்ணசாமியும் அவர் சார்ந்த சமூகமும் தங்களது அரசியலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனப்பான்மை.

அப்புறம் ரொம்ப நாளா திராவிடத்தின் விளம்பர அரசியல் குறித்து சில சந்தேகங்கள் இருக்கின்றன.

1. திராவிடக் கட்சிகள் அனைத்திற்கும் தாங்கள்தான் தாய்க்கழகம் என உரிமை கொண்டாடும் திராவிடர் கழகம்
மாட்டுக்கறி விருந்து, தாலியகற்றும் நிகழ்வு ஆகிய அடையாளப் போராட்டங்களில் ஏன் திராவிடக் கட்சிகளை அழைப்பதில்லை?
மாறாக விசிக, ஆதித்தமிழர் போன்ற கட்சிகளை ஏன் அழைக்கிறார்கள்?

2. திமுக மேடைகளில் சுப.வீ, கி.வீரமணி ஆகியோர் பேசும்போது ஏன் மாட்டுக்கறி, தாலியகற்றுதல் ஆகியவை பற்றி பேசுவதில்லை?

அதாவது ஆதித்தமிழன் இருக்கும் கட்சிகளின்(விசிக, ஆதிதமிழர் போன்ற தலித் கட்சிகள்) மேடைகளில் முற்போக்கு பேசுவது,
சாதித் தமிழன் இருக்கும் கட்சிகளின்(திராவிடக் கட்சிகள்) மேடைகளில் வெறும் ஓட்டு பொறுக்குவது,
இதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள் திராவிடத்தின் பெயரால்.
முற்போக்கும் ஆச்சு, பணமும் சம்பாதித்த மாதிரி ஆச்சு.

அதனால்தான் தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்பது கானல் நீராகவே உள்ளது.

சனி, 12 நவம்பர், 2016

தேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக....

"கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. புதிய இந்தியா பிறந்து விட்டது. மோடி சாதித்துவிட்டார்" என  நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!

முதலில் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி. அதில் 500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடி.
அதில் கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி.

அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக RBI தகவல் உள்ளது. RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஆகவே மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் இதில் சில கோடிகள் வெள்ளையாக மாறியிருக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே.

ஆனால் வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பதுக்கியுள்ள பணம் 100லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும். நம்மூரு நத்தம் விஸ்வநாதனே 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது. இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள் நாடு முழுக்க உண்டு. அரசியல், சினிமா, தொழில் என பல வழிகளில் சேர்த்து பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது.

கறுப்பு பணம் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை இருந்தால் இந்த 100 லட்சம் கோடியைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டு தன்னை கறுப்பு பண அழிப்பாளராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்.

"இல்லை, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்" என நம்பினால் நீங்கள் அப்பாவியே!  வெளிநாட்டு வங்கி ஒன்று தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை அரசிடம் ஒப்படைத்தது. அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிடவில்லை மோடி அரசு. பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்?

அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம். அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான்.

"மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?" என நீங்கள் எதிர்கேள்வி கேட்கக் கூடும். நிச்சயம் அப்படி இல்லை. தேர்தலில் வாக்களித்தப்படி விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில் நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது.

ஆனால் இதையெல்லாம் ஒருகாலமும்  மோடி அரசால் செய்ய முடியாது. ஏனெனில் இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது கார்பரேட் முதலாளிகள்தான்.

"அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்" என கேட்கும் அப்பாவியா நீங்கள்? உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன்.

1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு. அதற்கு ஊதியமாக வசூலிக்கும் பணத்தில் கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மாணவர்களின் கல்விக்கடனில் 40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே?. செய்யமாட்டார்கள். ஏனெனில் மாணவர்களை விட ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம்.

2.  நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. ஆனால் ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானி நிறுவனத்திற்கு 600 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது SBI வங்கி. ஏனெனில் விவசாயிகளின் நலனை விட அதானியின் நலன் முக்கியம்.

"எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?"
என்று கேள்வி எழுப்புகிறீர்களா?
அதற்கான பதில்:
நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர். இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை சமூகத்தின் அடித்தட்டிலிருந்து பார்க்கப் பழகுங்கள். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயனடையப் போவது யார் என ஆராயுங்கள்.
அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள். தேசபக்தி, நாட்டுநலன் என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடாதீர்கள். உங்கள் ஆட்டத்தால் பாதிக்கப்படுவது இந்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான்.

- குருநாதன்

புதன், 5 அக்டோபர், 2016

நிசப்தம் மணிகண்டன் அவர்களுக்கு மறுப்பு/விவாத கட்டுரை

அன்புள்ள மணிகண்டன்  அவர்களுக்கு வணக்கம்.
சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் இயங்குவதை  நிறுத்திக் கொண்டாலும் உங்களின் நிசப்தம் தளத்தை தொடர்ந்து  படித்து வருகிறேன். உங்களின் யதார்த்த எழுத்து நடைதான் காரணம்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை  விமர்சித்து  நீங்கள் கட்டுரை எழுதும் அளவுக்கு தமிழ்தேசியத் தாகமும் குரலும்  அதிகரித்து விட்டது. ஒரு தமிழ்த்தேசியவாதியாக மகிழ்ச்சி அடைகிறேன்.
கட்டுரையைப் படிக்க: http://www.nisaptham.com/2016/10/blog-post_76.htmlஉங்களின் கட்டுரைக்கு மறுப்பு எழுத ஆர்வம் உள்ளது. மறுப்பு என்பதை விட விவாதம் என்றே எடுத்துக் கொள்ளலாம். 
விவாதம் என்பதற்காக  தாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தமிழ்த்தேசியவாதிகளின் குரலை சற்று கேட்டுப் பாருங்கள் என்றே சொல்ல விழைகிறேன்.

//எந்தவொரு பிரச்சினையிலும் தேசத்தின் மீதான வன்மத்தைக் கக்குவதைப் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது//
தேசத்தின் பெயரால் அயோக்கியத்தனம் நடைபெறும்போது தேசத்தின் மீது விமர்சனம் எழுப்பப்படுவது இயல்புதான். தேசம் என்பதை புனிதமாகக் காட்டி வழிபாடு செய்ய வேண்டாம். ஏனெனில் இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று எதுவுமில்லை.

//‘இதுதான் தீர்வு’ என்று முதலிலேயே சொல்லிவிட்டு விவாதத்தைத் தொடங்கக் கூடாது. //
அப்படி யாரும் எடுத்த எடுப்பிலேயே தனிநாடு கோரிக்கையோடு கிளம்பவில்லை. 
உதாரணத்திற்கு  தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் பழ.நெடுமாறன்  போன்ற தமிழ்தேசியவாதிகளின் அரசியல் பயணத்தை திருப்பி பாருங்கள். இந்திய நீரோட்டத்தின் பாதையிலிருந்து விலகி தமிழ்த்தேசியம் நோக்கி வந்திருக்கிறார்கள்.
அண்ணன் சுப.உதயகுமாரால் ஆம் ஆத்மி கட்சியில் நீடிக்க முடியவில்லையே. ஏன் என்று அவரைக் கேட்டுப் பாருங்கள்.
"நோய் நாடி நோய் முதல்நாடி" என்கிற குறள் இங்கு நினைவுக்கு வருகிறது. 
இந்திய தேசியம் நம்மைப் பிடித்த நோயாகவும், தமிழக விடுதலையை அதற்கு நன்மருந்து எனவும் சொல்கிறோம்.

//தமிழகத்தை தனியாக்கி தமிழனை பிரதமராக நியமித்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்ன? அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பே இல்லை.//
உலகம் முழுக்க பல நாடுகள் ஏன் உருவாகின என்பதை ஆராய கேட்டுக் கொள்கிறேன். பாலாறும் தேனாறும் ஓடும் என சொல்லவில்லை. ஆனால் தற்போது இருக்கும் நிலையை விட மிகவும் நல்ல முறையில் தமிழ்நாடு அமையும்.
தமிழ்நாட்டுக்கு என்று தனியாக பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை என பலவற்றை உருவாக்க முடியும். அதிகாரத்தைப் பரவலாக்க முடியும். 
மக்களின் நிர்ப்பந்தமே வெற்றி பேரும். சுருங்கச் சொன்னால் மக்களே ஆள்வார்கள். எட்டு கோடி தமிழர்களால் இந்தியப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்க முடியாது. ஆனால் தமிழ்தேசியத் தலைமையை எதிர்த்து நிற்க முடியும். நிர்ப்பந்திக்க முடியும்.

//தமிழனுக்கும் மலையாளத்தானுக்குமான பிரச்சினைக்கு பதில் வன்னியனுக்கும் பறையனுக்குமான பிரச்சினையாக இருக்கும்.//
தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும்போது பலரும் சாதியச் சிக்கலை முன்னிறுத்துவது இயல்புதான். 
ஆனால் நான் பழகியவரையில் பல தமிழ்த்தேசிய நண்பர்களும் சாதி மறுப்பு கொள்கை கொண்டவர்கள். ஆகவே தமிழ்த்தேசிய உணர்வோடு சாதிமறுப்பு உணர்வும் சேர்ந்தே வருகிறது.
"நாம் தமிழர்" என்கிற உணர்வு மிகவும் வலுப்பெறும்போது சாதி பின்னுக்குத் தள்ளப்பட்டு. ஒழிக்கப்படும்.
சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தமிழ்தேசியம் பேசினால் மணிகண்டன் ஏற்றுக் கொள்வாரா?
இந்திய அரசியல் சட்டம் சாதியை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறதே! அதனை ஏற்றுக் கொண்டு சாதிஒழிப்பு பற்றி பேசுவது முரண்.

//நம்மிடமே சிக்கல்கள் நிறைந்து கிடக்கின்றன. சாதி, இனம், குலம், கூட்டம் என்று கிணற்றுக்குள் சிக்கிய தவளைகளைப் போல தலையை மேலே எடுக்கிறவனையெல்லாம் இழுத்து இழுத்துக் கீழே எறிந்துவிட்டு இந்த நாடுதான் தமிழனை மேலே வர அனுமதிப்பதில்லை என்று பேசுவதைப் போன்ற அபத்த நகைச்சுவை வேறு இருக்க முடியாது. //
இந்திய தேசியத்தைக் காக்கும் தீவிரம் தவிர வேறு எதுவும் இந்த வார்த்தைகளில் தெரியவில்லை. மக்களைக் குறை சொல்லி தப்பிக்கும் தந்திரமாக உள்ளது.
எட்டு கோடி மக்களின் குரலான தமிழக சட்டசபை தீர்மானங்கள் டெல்லி குப்பைத்தொட்டிக்கு போகிறதே! அதனை நிறுத்துவது எப்படி என்பதை மணிகண்டன் விளக்கினால் நலம்.

//இந்திய தேசியம் பேசுகிறவனையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்லீப்பர் செல் என்றும், இந்துத்துவவாதி என்றும் ஓரங்கட்டுகிறார்கள். //
இது தவறான அணுகுமுறைதான். சிலர் ஆர்வக்கோளாறில் செய்வதை நான் கவனித்திருக்கிறேன். இது உணர்ச்சிவேகத்தின் வெளிப்பாடுதான்.
தவிர்க்கப்பட வேண்டியது.

//முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல் எழுப்பலாம். போராடி பெற்றுக் கொள்ளலாம். //
எப்படி போராடுவது என்பதை விளக்கினால் இன்னும் நலம். 
தமிழர்களாக ஒன்றுபட்டுத்தான் போராடனும். அப்படி ஒன்றுபடுவதையே  இனவாதம், பிரிவினைவாதம் என்கிறீர்களே!
ஒன்றுபட்டுதான் நிற்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் நிருபராதிகளை விடுவிக்க முடியவில்லையே!
காவிரி உரிமையை மீட்க முடியவில்லையே! பாலாற்றில் அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே! மக்கள்விரோத பாராளுமன்ற தீர்மானங்களை தடுத்து நிறுத்த முடியவில்லையே!
என்ன செய்தால் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியும் என்பதையும் தாங்கள் சொல்லியாக வேண்டும். அப்படி இல்லாமல் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காஷ்மீரிகள் மீதான இனப்படுகொலைக்கு என்ன நீதி? ஆக்கிரமிப்பு ராணுவத்தை எப்படி அகற்றுவது? விடுதலை ஒன்றுதான் தீர்வு.

//இந்த நாட்டில் ஆயிரம் குறைகள் உண்டு. அத்தனை குறைகளோடும் அத்தனை சிக்கல்களோடும் இந்த தேசத்தை மனதார நேசிக்கிறேன்.//
சிறுவயதில் இருந்து இந்திய தேசிய உணர்வு ஊட்டப்படுவதால்தான் இப்படி சொல்ல முடிகிறது. நானும் அதனை கடந்து வந்தவன்தான்.
நான் தமிழ்த்தேசியவாதியாக மாறக் காரணம் இந்தியப் பேரினவாதம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள்தான். 
"பிரச்சினைகள் ஓர் ஓரமாக இருக்கட்டும், நாம் தேசிய கீதத்தை ரசிப்போம், தேசியக் கோடிக்கு வணக்கம் செலுத்துவோம்" என்பதே ஒருவகையில் மக்கள் விரோத நிலைப்பாடுதான்.
"தமிழனைக் கொல்லும் சிங்கள ராணுவம் மீது எப்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யப் போவீர்கள்?" என இந்தியப் பேரரசை நோக்கி கேள்வி கேட்பதில் தவறு ஏதும் இல்லையே!

"சரி, தனித் தமிழ்நாடு தவிர வேறு தீர்வு இல்லையா?" என்று நீங்கள் கேட்கக் கூடும்.
கண்டிப்பாக உண்டு. அதனையும் விவாதிக்கலாம்.
அதிகாரப் பரவலாக்கல் என்கிற தீர்வு உண்டு. மத்தியப் பட்டியலில் சில துறைகளை ஒதுக்கிவிட்டு, முழு அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதுதான்.
பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை, வேளாண் கொள்கை  என அனைத்தையும் மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய ஒன்றியம் தாக்குப் பிடிக்க வாய்ப்புகள் உண்டு.
மணிகண்டன் போன்றவர்கள் அதனை வழிமொழிவார்களா?

அதெல்லாம் ஒரு போதும் சாத்தியம் ஆகாது, ஆகவே விடுதலை ஒன்றே தீர்வு என்கிற தமிழ்த்தேசிய அரசியல் என்கிற ஒன்றை என்னைப் போன்ற சிலர் முன்வைக்கிறோம்.
அதனை விவாதிக்க வேண்டுமேயொழிய, அரைவேக்காட்டுத்தனம், முரட்டுத்தனம் என ஒதுக்கக் கூடாது.
தொடர்ந்து விவாதிப்போம். நன்றி 

பின்குறிப்பு: பாகிஸ்தானிலிருந்து பலோசிஸ்தான் விடுதலை அடைய விரும்புகிறது. இந்திய அரசும் மறைமுக ஆதரவு கொடுக்க ஆரம்பித்துள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

வியாழன், 3 மார்ச், 2016

வெறுப்பரசியலின் களம் தமிழ்நாடு


இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் அண்ணன் சீமானை சந்தித்துள்ளார்கள்.. உடனே நம்ம ஆட்கள் அந்தப் போட்டோவை தூக்கிட்டு வந்துவிட்டார்கள். இந்துத்வ கைக்கூலி, ஆர்.எஸ்.எஸ் அடியாள் என பல கதைகளை எழுதுகிறார்கள்.

முன்பு மோடியை திருமா சந்தித்த போதும், துக்ளக் விழாவில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசியபோதும் இப்படித்தான் சேறு வாரி இறைத்தார்கள்.

மாற்றுக்கருத்து உடையவர்களை மனிதர்களாக கூட மதிக்கக் கூடாது என்கிற அளவுக்கு வளர்ந்துள்ள பாசிசத்தின் வெளிப்பாடுதான் இது. காவி பாசிசத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்தப் பாசிசம்.

ஆனால் இது போன்ற ஆட்கள் சில நேரம் அதிக நாகரீகத்துடன் பதிவும் போடுவார்கள். அத்வானியும் சோனியாவும் அருகருகே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'இந்த மாதிரி நாகரீக அரசியல் தமிழகத்தில் வராதா!!' என் உச்சுக்கொட்டுவார்கள்.

ரொம்ப முரணான இப்படியான ஆட்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை..

காவி அரசியலில் மூழ்கியுள்ள அர்ஜுன் சம்பத் வகையறாக்களை மீட்பது முற்போக்கா??
அல்லது மேலும் மேலும் காவி சகதிக்குள் அவர்களை அழுத்துவது முற்போக்கா?? என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.

புதன், 2 மார்ச், 2016

பெரியார் பின்னால் ஒளிந்துகொள்ளும் மார்க்சிஸ்டுகளுக்கு..


இந்திய விடுதலை நாளைக் கருப்புதினமாக அறிவித்த பெரியாரின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்திய வரைபட எரிப்பு, இந்திய அரசியலமைப்பு எரிப்பு உள்ளிட்ட செயல்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?

'தமிழ்நாடு தமிழருக்கே' என்கிற முழக்கத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
மேலே சொன்ன அனைத்தும் சாதி ஒழிப்பு மற்றும் பிராமண எதிர்ப்பின் நீட்சியாக பெரியார் செய்த செயல்கள்.
பிராமண எதிர்ப்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

கட்சியின் இந்தியத் தலைமை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்க்கிறதே! அதில் தங்கள் நிலைப்பாடு என்ன?

தாங்களும், பெரியாரும் எந்தப் புள்ளியில் ஒன்றுபடுகிறீர்கள்?

தயவு செய்து விளக்குங்கள். சும்மா தற்காப்புக்காக பெரியார் பின்னாடி ஒளியாதீர்.
உங்களைப் பற்றி ஏற்கனவே பெரியார் நிறையவே சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

சனி, 27 பிப்ரவரி, 2016

"நமக்கு எதுக்கு வம்பு" - நூல் விமர்சனம்


கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தனது கார்டூன்களைப் பற்றியும், அவற்றின் மீது வந்த விமர்சனங்களையும் தனது நூலில் விவரித்து எழுதியுள்ளார் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் பேஸ்புக்கில் பாலா அவர்கள் எழுதிய கட்டுரை( அவரது மொழியில் கிறுக்கல்)களின் தொகுப்புதான் இந்நூல்.
சிறந்த கிறுக்கல்களைத் தொகுத்து ஒரே இடத்தில் வைத்து படிப்பதும் தனி இன்பம்தான்.பெரும்பாலான கட்டுரைகள் அவரது அனுபவங்கள் மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் தொடர்பானவை. அரசியல் கட்டுரைகள் பலவும் சாதி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்வ அரசியல் எதிர்ப்பு தொடர்பானவை. திராவிட ஓட்டரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்துகிறார். காவல்துறை அதிகாரி அம்பேத்கர் பற்றி ஒரு சிறப்பான கட்டுரை உள்ளது.

பாலாவின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்நூலில் புதிதாய் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மீண்டும் ஒரு மறுவாசிப்பு செய்ய உதவும். மிகவும் சிறிய நூல்தான்.
சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து பயணத்திற்குள் படித்து முடித்து விடலாம்..

பாலாவின் கட்டுரைகளைப் புதிதாய் படிப்பவர்களுக்கு இந்நூல் அதிகம் உதவும். பாலாவுக்கு புதிய ரசிகர்கள் இந்நூல் மூலம் கிடைப்பார்கள் என உறுதியாகச் சொல்ல முடியும்.

பாலாவினால் பேஸ்புக்கில் தடை செய்யப்பட்ட நண்பர்கள் அதிகம். அவர்களுக்கும் இந்நூல் பெரும்பாலும் உதவும்.   அவரின் ஏதோ ஒரு பதிவுக்காக அல்லது கார்டூனுக்காக அவரிடம் மல்லு கட்டியிருப்பீர்கள். அவரைத் தனது சாதி, மத, கட்சியின் எதிரியாக சித்தரித்து இருப்பீர்கள். இந்நூலில் அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில இருப்பதால் பாலாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று படித்து அறிந்துகொள்ள முடியும்.

கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் 'நடுநிலைவாதி' என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அவர் ஒருபக்க சார்பு உடையவர். ஆம், எளிய மக்களின் பக்கமும், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமும் நின்று பேசுபவர். அவரின் கார்டூன்களும், எழுத்துக்களும் எளிய மக்களுக்கானவை.

பின் குறிப்பு: கார்டூன்களை சிறிய அளவில் அச்சடித்துள்ளது நன்றாக இல்லை. அரை பக்க அளவிற்கு பெரிதாக அச்சடித்திருக்கலாம். மேலும் அதிக கார்டூன்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அதுதான் புத்தகத்தின் ஒரே குறை.
சர்ச்சை கார்டூன்கள் பற்றியும் அதனைக் கடந்து வந்த விதம் பற்றியும் எழுதினால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அடுத்த நூலில் எதிர்பார்க்கிறோம்.