திங்கள், 28 ஜனவரி, 2013

மாவீரன் முத்துக்குமாரோடு பழகிய சில நாட்கள்

ஜனவரி 29, 2013 நான்காம் ஆண்டு வீரவணக்க நாள்  
மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்!

தூங்கிக்கொண்டு இருந்த எம்மீது தீயை தெளித்து எழுப்பியவனே! உன் கனவு நினைவேற பாடுபடுவோம்.

எழுக தமிழினமே எழுக… எழுக தமிழகமே எழுக…
எழும் எங்கள் ஈழம்,.. தமிழீழம்…
மாவீரன் முத்துக்குமார் புகழ் ஓங்குக!!!…


தூத்துக்குடி மாவட்டம் கொழுவைநல்லூர்  கிராமத்தில் பிறந்தவர் அண்ணன் முத்துக்குமார். எனது கிராமத்தின் மிக அருகில் உள்ள கிராமம்.
என்னை விட ஐந்து வயது மூத்தவர். அவர் படித்த பள்ளியில்தான் (TDTA High School, Maranthalai) நான்  படித்தேன்.

சிறுவயதிலேயே மிகுந்த தமிழுணர்வு கொண்டவர். எப்போதும் மிக அமைதியாகவே இருப்பார். எப்போதும் நூலகத்தில்தான் இருப்பார்.
தூய தமிழில்தான் பேசுவார். இது அப்பள்ளியில் படித்த பலருக்கும் தெரியும். இதனை வைத்து அவரை கேலி செய்தவர்களும் உண்டு.
ஆனாலும் தன்  மனந்தளராமல் தூய தமிழில் பேசுவதை தொடர்ந்தார். தமிழ் நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
பள்ளி நாடகம் ஒன்றில் முனிவர் வேடமிட்டு அவர் வீரவசனம் பேசியது நன்றாக ஞாபகம் இருக்கிறது..


படிப்பிலும் மிக திறமைசாலி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 460க்கு மேல் மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் மாணவனாக திகழ்ந்தார்.
இவரது வகுப்பில் எப்போதும் இவர்தான் வகுப்புதலைவராக இருப்பார். அந்த அளவிற்கு அனைத்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நல்லபெயர் எடுத்தவர்.

அவரது கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்குபெற்று உரையாற்றுவார். தமிழ் நாடகங்களை சிறுவர்களுக்கு சொல்லிகொடுத்து நடிக்க சொல்லுவார்.
ஏழ்மையின் காரணமாக பள்ளிப்படிப்பை அவரால் தொடர முடியவில்லை. அதன்பின்னர்தான் அவர் சென்னை வந்தார்.

இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்குள் இருந்ததாகவும்,  ‘பனைமரம்’ என்னும் சிறுதொடர் எழுதியுள்ளதாகவும் அவரது நண்பர் ஒருவர் என்னிடம் சமீபத்தில் கூறினார்..
பின்னர் சில ஆண்டுகள் அவரை நான் பார்க்கவே இல்லை. நானும் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வந்து சேர்ந்தேன்.

நான் படித்த கல்லூரியில் அண்ணன் முத்துக்குமார் அவர்கள் காவலாளியாக வேலை பார்த்துகொண்டிருந்தார். பார்த்தவுடன் கண்கலங்கியது..
அவர் தானாகவே முன்வந்து என்னிடம் நலம் விசாரித்தார். சில நிமிடங்கள் பேசிக்கொடிருந்தோம்.
நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கும் காவலாளியாக வருவார். அப்போதும் பேசிக்கொண்டோம்.

அப்போது ‘C Programming’ என்னும் கணிப்பொறி  மொழியை  யாருடைய உதவியும் இன்றி அவராகவே படித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கூட அதை படிப்பதற்கு திணறுவார்கள்.  மிக எளிமையாக அதனை கற்றுக்கொண்டு, என்னிடமும் விளக்கினார்.
அவ்வாறு கற்கும் ஆர்வமும், கற்பிக்கும் ஆர்வமும் அண்ணன் முத்துக்குமாரிடம் அதிகம் இருந்தது.

அண்ணன் முத்துக்குமார் எந்த அளவிற்கு தூயத்தமிழ் பேசுவாரோ, அதே அளவிற்கு தூய்மையாக ஆங்கிலமும் பேசுவார். வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும், ‘வார இதழ்’ ஒன்றில் வேலை செய்வதாகவும் சக காவலாளி ஒருவர் கூறினார்.
பின்னர் இரண்டு ஆண்டுகள் அவரை பார்க்கவே இல்லை. பின்னர் அவரது படத்தை தினத்தந்தி   செய்தித்தாளில்தான் பார்த்தேன். மிக அதிர்ச்சி அடைந்தேன்.

ஆம்,  ‘இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தூத்துக்குடி வாலிபர் தீக்குளித்து மரணம்’. என்ன செய்வது என்றே தெரியவில்லை. மறுநாளே கல்லூரிகளையும் விடுதிகளையும்  மூடச்சொல்லி அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.
மிகுந்த துயரத்தோடு தூத்துக்குடிக்கு சென்றேன்.

அவரைப்போன்ற தமிழுணர்வாளர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
அவரோடு பழகிய சிலநாட்களில்  ஒருமுறைகூட அவர் தமிழ் பற்றியோ, தமிழ் ஈழம் பற்றியோ, விடுதலைப்புலிகள் பற்றியோ என்னிடம் பேசியது கிடையாது.
அவர் இறந்தபின்னர் அவரது மரண சாசனத்தை படித்த பின்னர்தான் அவரது தமிழுணர்வை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.

அவர் ஏற்றிவைத்த புரட்சித்தீயில் என் போன்ற இன உணர்வற்றவர்கள் விழித்துக்கொண்டோம். முத்துக்குமாரின் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையோடு தமிழ்த்தேசிய களத்தில் நிற்கிறேன், என்றும் நிற்பேன்.
இந்திய தேசிய கட்சிகளை மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவோம். இந்தியாவின் நரித்தனங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

அவரது தியாகத்தை கொச்சைபடுத்தும் பலர்  நம் மண்ணில்  இருப்பது மிக வருத்தம்..

மாவீரன் முத்துக்குமார் எழுதிய மரண சாசனத்தை முழுமையாக படிக்க: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

‘அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப்பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப்பாருங்கள் உங்களூக்கு அந்த வயதில் ஒரு அக்காவோ தங்கையோ இல்லயா?’ என்று முத்துக்குமார் கேட்டதை நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்குமுன் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேன்டிய கேள்விகள் இவை.
மேலும் படிக்க

1 கருத்து:

  1. நன்றி நண்பரே, நிச்சயம் அவர் கனவும் எம் கனவும் நிறைவேறும்.

    பதிலளிநீக்கு