ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஈழமும், இந்தியக் கட்சிகளின் பித்தலாட்டங்களும்

* ராஜபக்சே ஒரு கொலைகாரன், கொடூரன் என சமீபகாலமாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் நமக்கு அதிகமாக வகுப்பெடுக்கிறார்கள். இதையே கடந்த ஐந்து வருடங்களாக நாம் சொன்னபோது மறுத்தவர்களும் இவர்களே! உலகக்கோப்பை கிரிக்கெட், காமன்வெல்த் விளையாட்டு, பிரதமர்  பதவியேற்பு விழா என பல நிகழ்வுகளிலும் ராஜபக்சேவை அழைத்து விருந்து வைத்தபோது அவன் ஒரு கொலைகாரன் என்று இவர்களுக்கு தெரியவில்லை போல!!

* சரி, ராஜபக்சே ஒரு கொலைகாரன், குற்றவாளி என்பதே உண்மை.
அவன் செய்த குற்றமென்ன? அவர் யாரைக் கொலை செய்தான்? என்பது குறித்து பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள் இந்த இந்தியக் கட்சிகள்.
அவன் செய்தது இனப்படுகொலை என்ற உண்மையை திட்டமிட்டு மறைக்கிறார்கள். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்கள்.

* இலங்கைத்தீவில் அனைத்து தரப்பு மனிதர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறல்.
இருதரப்பு மக்களும் யுத்தத்தில் அழிக்கப்பட்டிருந்தால் அது போர்க்குற்றம்.
ஆனால் நடந்தது என்ன? தமிழர்கள் மட்டும் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள்.
அதை மூடி மறைப்பதில் இலங்கைக்கு சகல வசதிகளையும் இன்றுவரை செய்து தருகிறது இந்திய அரசு.

* இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து சிந்திக்கிறார்களாம் பாஜக ஆட்சியாளர்கள். இதைத்தானே கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருந்தது. அப்படியானால் இந்நாள் வரை எந்த சீரமைப்பும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறதா இந்திய அரசு?..
  காங்கிரஸ் சொன்னது பொய்யா? பாஜக சொல்வது பொய்யா? தமிழர்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்கள் என எண்ணுகிறார்கள் போல.

* இலங்கையின் மொத்த ராணுவத் தொகை இரண்டு லட்சம். அதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர் தாயகமான ஈழத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். ராணுவத்தை வெளியேற்றுவது குறித்து பேச கூட மறுக்கும் இந்திய அரசு தமிழர்களுக்கு நல்லது செய்யும் என்பதை நம்ப தமிழர்கள் என்ன முட்டாள்களா?

* தமிழர்களுக்கு வெளிப்படியாக நல்லது செய்தால் சிங்களர்களுக்கு கோபம் வந்துவிடும், அவர்கள் மீண்டும் ராஜபக்சேவை அரியணை  ஏற்றிவிடுவார்கள் என புதுவகையான பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
தமிழர்களுக்கு நல்லது செய்வது சிங்களர்களுக்குப் பிடிக்காது என்றால் தமிழனும் சிங்களனும் எப்படி இணைந்து வாழ முடியும்?

* சிங்கள உழைக்கும் மக்களும் தமிழ் உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என இன்னொரு தரப்பு வகுப்பெடுக்கிறது. நியாயம்தான்.. ஆனால் யதார்த்தம் என்ன? தமிழன் அழிக்கப்படும்போது அதனைத் தடுக்கக் கோரி எந்த சிங்கள உழைக்கும் மக்களோ, அமைப்போ குரல் கொடுக்கவில்லையே! அனைவரும் ஒன்றாகக் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்களே!!(அதற்காக அனைந்து சிங்களர்களும் இனப்படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது).. நடந்தது இனப்படுகொலை என்கிற உண்மையைப் பேசும் ஒரு சிங்கள அமைப்பாவது இருக்கிறதா? அப்புறம் எங்கே ஒன்றா சேர்ந்து போராடுவது??

பொதுவாக்கெடுப்பைத் தவிர வேறு எதுவும் தீர்வாகாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக